வியாழன், 12 பிப்ரவரி, 2015

சுப்ரமணிய விருத்தம்

சுப்ரமணிய சப்தகம் என்ற பெயரில் இணையத்தில் பார்த்தேன். ஆனால் நான் படித்த விருத்தப்பாக்களை போல் இருப்பதால் நமது பதிவில் "சுப்ரமணிய விருத்தம்" என்றே பதிவிட்டுள்ளேன். எழுதியவர் பெயர் தெரியவில்லை.

கந்தனே! கடம்பனே! கருத்தினில் உறைந்திடும் கருணை வடிவான குகனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடுனும் ஏழையைக் காக்க ஒரு கண்ணுமிலையோ!
சிந்தனை முழுவதும் சிதறிடா வண்ணமுன் செம்மலர்ப் பாதங்களே!
சரண் என்று கொண்டுனைச் சந்ததம் பாவினேன் செவிகளில் விழவில்லையோ!
வந்தனை செய்துனை வாழ்த்தியே நாளெல்லாம் வணங்கிடும் சிறுவன் என்னை
வாழவே வைப்பதும் வேலனே! உனக்கு ஒரு விளையாட்டுச் செய்கை யன்றோ!
வந்தெனை இக்கணம் வலியவந்தே அருள வேண்டியே பணிந்து நின்றேன்
வளமான திருத்தணியில் வந்து நிதம் வாழ்கின்ற வேலனே! சக்தி மகனே!

எத்தனை விதங்களில் என் அப்பனே! உன்னையான் எப்படிப் பாடினாலும்
எத்தனை இடங்களில் என் ஐயனே! உன்னையான் எப்படி நோக்கினாலும்!
எத்தனைபேர் சொல்லி என் குறைகள் யாவுமே எடுத்து நான் கதறினாலும்
ஏலாமல் இன்னுமேன் என்னையே சோதித்து எள்ளி நகையாடுகின்றாய்!
உத்தமன் உன்னையே ஓர் துணை என்றுநான் உறுதியாய் பற்றி நின்றேன்
உடனே உன்மயில் மீது ஓடோடி வந்தெனது உறுவினைகள் யாவும் களைவாய்!
பித்தனின் மைந்தனே! பக்தியாற் பிதற்றுமிப் பித்தனையும் ஆண்டருள்வாய்!
பெருமைபொலி செந்தூரில் புகழ்சேர ஒளிர்கின்ற பாலனே சக்தி மகனே!

கதியாக உன்பதங் கருத்தினில் கொண்டு நான் கதறியே அழுகின்றதும்
கொடுமையாம் வறுமையிற் குமைந்து நான் உன்னருளைக் கூவியே தொழுகின்றதும்!
பதியான உன்செவிகள் பன்னிரெண்டிலொன்றிலுமே பதியாமல் இருப்பதேனோ
படுதுயரம் இனிமேலும் படமுடியாதப்பனே பார்த்தருள் புரிகுவாயே!
விதியான தென்னை மிக வாட்டியே வதைத்திடவும் வேறொன்றும் செய்வதறியேன்
விழிகளில் நீர் பெருக வீழ்ந்து நான் கதறுவதை வேடிக்கை பார்ப்பதழகோ
துதிபாடி உன்னையே தொழுகின்ற என் துயர் துடைப்பதுன் கடமையன்றோ?
தூய்மைசேர் பழநிதனில் தனியாகத் தவங்கொண்ட தூயனே! சக்திமகனே!

மாயவன் மருகனே! மாகாளி மைந்தனே! மனத்தினில் என்றும் வதியும்
மாய சொரூபிணியும் மலையரசன் மகளுமாம் மாசக்தி வேல் கொண்டவா!
தூயவன் உன்னையான் தினமுமே பாடியும் திருவுளம் இரங்க விலையோ!
துதிப்பதில் பிழையேது மிருப்பினும் தயவாகப் பொருத்தருள் தள்ளிடாதே!
நீயெனத் தள்ளிடினும் நானுனது பாதமே நம்பினேன் நாளும் ஐயா!
நெஞ்சமும் உருகியே நீராக விழிகளில் நாளெல்லாம் ஓடநானும்!
ஐயனேஉன்னடிகள் அடைக்கலமென்றடைந்திட்டேன் ஆண்டருள் செய்குவாயே!
அழகான ஏரகத்தமருமொரு குருவே! என் அன்னையாம் சக்தி மகனே!

பாரதனில் பிறந்திட்டுப் பலகஷ்டம் தான் பட்டுப் பாவியேன் மிகவும் நொந்தேன்
பார்த்தருள் புரிகுவாய்! பார்வதியின் மைந்தனே பாலனே! கருணை செய்வாய்!
பேரெதும் வேண்டிலேன்! புகழ் வேண்டேன் உன் பாதப் புகலொன்றே போதுமப்பா!
பேதை நான் படுந்துயரைப் புரிந்து நீ அருள் புரிந்து பாரெல்லாம் வாழவைப்பாய்
ஆரெதும் சொல்லிடினும் அத்தனையும் உன்னடியில் அர்ப்பணித் தமைதி கொள்வேன்
ஆதரவு நீயன்றி ஆருமெனக் கில்லையென அன்றே நான் கண்டுகொண்டேன்
ஊரெதனில் உறைந்தாலும் உள்ளத்தில் என்றுமே உன்னை நான் சிக்கவைத்தேன்
உயர்வான பழமுதிர் சோலைதனில் உறைகின்ற ஒருவனே சக்தி மகனே!